சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா
சேலம், டி.வி.என் திருமண மண்டபத்தில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் தலைமையில் 25/11/2021அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
காப்பு விழாவில் 200 கர்ப்பிணிபெண் களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்பட்டு, வளைகாப்பு நடத்தி வைக்கப்படுகிறது.
இவ்விழாவிற்கு பின்னர் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் 5 வகையான உணவுகள் வழங்கப் படவுள்ளது. மேலும், இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் உள்ள 22 வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்
களின் மூலம் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 4,500 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கி, சமுதாய வளைகாப்பு நடத்தி வைக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் தமிழகத்தை ஊட்டச்சத்து குறைபாடில்லாத மாநிலமாகவும், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் உள்ள மாநிலமாகவும் மேம்படுத்துவதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு, வளர் இளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைக்கல்வி, பாரம்பரிய உணவுத் திருவிழா, தாய்பால் வார விழா, போஷன் அபியான் (ஊட்டச் சத்து விழிப்புணர்வு) போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் வளர்ச்சி அதன் வாழ்வின் முதல் 1000 நாட்களுக்குள்ளே அதிக அளவில் நடைபெற்று விடுகிறது. இரண்டு வயதிற்குபின் ஒரு குழந்தைக்கு ஏற்படும் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக் குறைபாட்டினை திரும்ப சரி செய்வது என்பது முடியாததாகும். எனவே, ஆரோக்கியமான வளர்ச்சிக்கு குழந்தை பிறந்ததிலிருந்து முதல் இரண்டு வருட காலம் வரைஅதிக கவனம் செலுத்த வேண்டும்.
வளர் இளம் பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோரின் மேம்பாட்டிற்கு பல்வேறு நலத் திட்டங்கள் தொடங்கப்பட்டு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மூலம் தொடந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திரு.ரா. செந்தில்குமார் உள்ளிட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment